-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு-
மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிக்க பாடுபடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்கு பார்வை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை – அரலகங்வில பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், அரசாங்கத்துக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வை இல்லை. ஆனால், அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதழொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது.
பாதிக்கப்பட்ட தாய்நாட்டுக்கு நிவாரணங்களைப் பெற்றுத் தரும், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தக்கூடிய புதிய பயணமொன்றை ஆரம்பிப்பது தேவையாக காணப்பட்டாலும், அரசாங்கத்தின் இதுவரையான நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அதனைக் காண முடியாதுள்ளது.
தித்வா சூறாவளிக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களித்த விவசாயம், சேவைகள் துறை மற்றும் தொழிற்துறைகள் சூறாவளிக்குப் பிறகு பல்வேறு கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் பாதிக்கப்பட்டிருப்போரை வலுப்படுத்தவேண்டும்.
உணவுப் பாதுகாப்புக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு, ஏற்றுமதித் துறைக்கு, உற்பத்தித்துறைக்கு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அரச அதிகாரிகளுக்கு அடிபணியாமல் தகுதியானவர்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். இது தேசிய நிகழ்ச்சி நிரலின் முதன்மை அம்சமாக அமைந்து காணப்பட வேண்டும். வீடுகள், சொத்துக்கள் மற்றும் வணிகங்கள் சேதமடைந்தவர்களுக்கு வாக்குறுதியளித்த நிவாரணத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தற்போது தேடி வருகிறது. மக்களை ஏமாற்றாது, வாக்குறுதியளித்த நிவாரணங்களை அதே முறையில் வழங்க வேண்டும்.
வெளிநாட்டு பொருளாதார வல்லுநர்கள் நமது நாட்டு மக்களைக் கருத்தில் கொண்டு செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடனை ஒத்திவைப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது, 2ஃ3 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கமும் ஜனாதிபதியும் இதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 200 மில்லியன் டொலர் அவசரக் கடனைப் பெற்றிருந்தாலும், இந்தக் கடனுக்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கடினமான நேரத்திலும் அரசாங்கத்தால் சலுகைக் கடனைப் பெற முடியாமல் போயுள்ளது. இந்த வழியில் சென்று ஒரு நாட்டால் முன்னேற முடியாது என்றார்.


















