-சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு-
மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் ‘தொல்லியல் இடம்’ என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
படுவான்கரை பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு செல்லும் வீதிகளில் இரு இடங்களில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகைகள் இடப்பட்டுள்ளன.
அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டுள்ளதுடன் மற்றைய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஸ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.
திருகோணமலையில் அத்துமீறி நவம்பர் 16 இல் புத்தர் சிலை வைக்கப்பட்டு சரியாக மூன்று தினங்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பெருநிலத்தில் இந்த விளம்பரப்பலகையிடப்பட்டு தாந்தாமலை தமிழரர்களின் பூர்வீக நிலத்தில் தொல்பொருள் ஆய்வு என்ற போர்வையில் பௌத்த விகாரைகளை நிறுவும் திட்டமாக இந்த விளம்பர அறிவிப்பு இடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















