மத்திய கிழக்கு போரின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அனுராதபுரம் – ஒட்டப்புவ, ரன்கெத்தகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற 850 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை எழுதுபொருட்கள் அடங்கிய பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
அங்கு மேலும் அவர் கூறுகையில், கடந்த தேர்தல் காலத்தில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் வயல்கள் வெளிகளுக்குச் சென்று ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை நாட்டின் சட்டமாக ஆக்கித் தருவோம் என்று கூறினர்.
ஆனால் இன்று குறைந்த பட்சம் ரூ.120 என்ற உத்தரவாத விலையும் இல்லை. துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் கூற்றுப்படி, உத்தரவாத விலையை வழங்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் போலும். ஒரு கிலோ நெல்லுக்கு 80 ரூபா கொடுத்தாலும், விவசாயிகளால் அவர்களின் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாமல் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று, நாட்டின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான ஏழ்மையடைந்தோர் இருந்தபோதிலும், முறைமையில் மாற்றங்களைச் செய்வதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் நிலக்கரியில் கூட சுரண்டலைச் செய்து வருகின்றது. இதுவரை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல்களும் தரமற்றவைகளாக காணப்படுகின்றன. நுரைச்சோலை மின் உ ற்பத்தி நிலையத்தால் 900 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியாமல் காணப்படுகின்றன. மின் உற்பத்தி நிலையத்தின் அறிக்கைகள் கூட இதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
அமைச்சர்கள் கூட இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைக்கு மத்தியிலும், ஆளும் தரப்பு அமைச்சர்கள் சங்கைக்குரிய மகா சங்கத்தினரை அவமதித்து, அவமானப்படுத்தி, சேறுபூசி வருகின்றது. அமைச்சர்கள் பிக்குகளை கேடுகெட்டவன் என்று அழைக்கின்றனர்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் ஆளும் தரப்பினருக்கு சரியான தெளிவில்லை. எதையும் அறியாத ஒரு குழுவினர் அரசாங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


















