மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்து யேமனின் வடமேற்கு பகுதியையும், சனா நகரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஹீதி அமைப்பினரும் போரில் நேரடியாக பங்குபற்றி தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதை தற்போது காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான சூழலில் இலங்கை பல்வேறு கோணங்களில் மோசமான பாதிப்புக்களை நேரடியாகவே எதிர்கொள்ள நேரிடும் என எஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ எச்சரித்துள்ளார். நேற்று நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறினார்.
அதில் மேலும் அவர் கூறுகையில், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் ஹீதி அமைப்பினர் போர்க்களத்திற்கு வருவதால் பல தாக்கங்கள் நமது நாட்டில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நீரிணை என்பது செங்கடல், மத்திய தரைக்கடல், அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய அனைத்தையும் இணைக்கும் இடமாக காணப்படு வதனால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதனால் எண்ணெய் விலை உயர்வு, கடல் வழி சரக்குகள் போக்குவரத்தில் தாமதங்கள் போன்றன ஏற்படலாம். இதனால் போக்குவரத்து கட்டணம், மின்சார கட்டணம் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரிக்கலாம். பாப் அல் மந்தாப் நீரிணையைத் தவிர்த்துச் செல்ல வேண்டுமெனில் நன்னம்பிக்கை முனையை பாறைக் குடாவைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிக்கும். போர் அபாயக் கட்டணங்கள் கூட அதிகரித்து கடுமையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இறக்குமதி செலவுகளும் அதிகரித்து, ஏற்றுமதி இலாப விகிதங்கள் கூட குறையலாம். நமது பொருட்களை வாங்குவோர் வேறு விநியோகஸ்தர்களை தேடுவதால் போட்டித்தன்மை காரணமாக அபாயங்கள் ஏற்படலாம்.
இந்த ஹூதி தாக்குதல்கள் மூலம் நமது நாடு எதிர்காலத்தில் அதிக செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் அரசாங்கம் இதுகுறித்து உடனடி செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த நீரிணை மூடப்படுவதனால் ஏற்படும் பாதிப்பிற்கு அரசிடம் மாற்று செயற்திட்டம் அமைந்து காணப்பட வேண்டும்.
அரசாங்கம் இவற்றிற்கு தீர்வுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் செயற்றிட்டமொன்று காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


















