-கட்டுநாயக்கவிலிருந்து துபாய் பறந்த முதலாவது விமானம்-
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டு, முக்கிய சர்வதேச வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஐரோப்பிய பயணங்களை வழக்கம் போல் முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் மற்றும் எத்திஹாட் போன்ற முன்னணி வானூர்தி நிறுவனங்கள் தமது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
துபாய், தோஹா மற்றும் அபுதாபி ஆகிய முக்கிய போக்குவரத்து மையங்கள் ஊடாகப் பயணிக்க முடியாமல் தவிக்கும் பயணிகள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாகத் தமது பயணங்களை மேற்கொள்ள முடியும்.
இடவசதிக்கு ஏற்ப பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எமிரேட்ஸ் வானூர்தி நிறுவனம் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிவரை துபாய்க்கான அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளது.
நாளை புதன்கிழமைக்கு முன் முன்பதிவு செய்தவர்கள் 20 நாட்களுக்குள் மீளப் பதிவு செய்யவோ அல்லது முழுப் பணத்தையும் திரும்பப் பெறவோ முடியும்.
அதேபோன்று கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தோஹாவிற்கான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பயணிகள் 7 நாட்களுக்குள் பயணத் திகதியை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எத்திஹாட் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை கட்டணமின்றி மீளப் பதிவு செய்ய அல்லது பணத்தைத் திரும்பப் பெற வசதி செய்துள்ளது.


















