-பா.சதீஸ்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் இருந்ததை அடுத்து குறித்த பாம்பினை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
நேற்றையதினம் அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்தது.
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புறப் பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


















