-மனைவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி-
-பா.சதீஸ்-
மனைவியை கோடரியால் வெட்டிய கணவன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த நிலையில், படுகாயமடைந்த மனைவி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் முல்லைத்தீவு – குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணவன் – மனைவி இடையில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் உறக்கத்திலிருந்து எழுந்த கணவன் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
நடந்த சம்பவங்களை சீ.சி.ரீ.வி கமரா ஊடாக பார்த்த வெளிநாட்டிலுள்ள மகன் அது குறித்து உடனடியாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து காயமடைந்த, 73 வயதான பெண் மீட்கப்பட்டு மாஞ்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிணற்றில் குதித்து உயிரிழந்த 75 வயதான வீரசிங்கம் என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் விரிவான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















