-கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் சங்கம்-
மேல் மாகாண சபையினால் கம்பஹா மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளுக்கு மருத்துவ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம குற்றம்சாட்டினார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாகத் தொழில்நுட்ப விவரக் குறிப்புகளை தயாரித்து, பொதுமக்களின் வரிப்பணத்தை மோசடி செய்யச் தொழில்நுட்ப கொள்முதல் குழு முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்
இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கம்பஹா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு ஒரு மெமோகிராம் இயந்திரத்தையும், அவிசாவளை மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு ஒரு சி.டி. ஸ்கேன் இயந்திரத்தையும் கொள்வனவு செய்ய மேல் மாகாண சபை அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காகச் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் தரம் மற்றும் தொழில்நுட்பத் துல்லியம் குறித்து ஆராய வேண்டிய தொழில்நுட்பக் குழுவில், தகுதியுள்ள கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.
இக்கொள்முதல் நடவடிக்கையில் உள்ள குளறுபடிகள் காரணமாக, அக்குழுவில் இருந்த விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் ஏற்கனவே அதிலிருந்து விலகியுள்ளார். ஒரு இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அதன் தரம் குறித்து நடுநிலையான தொழில்நுட்ப விவரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய குழு தமக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அந்த நிறுவனங்களின் இயந்திரங்களுக்குப் பொருந்தும் வகையில் விவரக் குறிப்புகளை மாற்றியமைத்துள்ளது.
இதன் மூலம் பொதுமக்களின் பாரியளவிலான பணம் மோசடிக்காரர்களால் வீணடிக்கப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.


















