இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்டன் செட்ரான் மருந்து தொடர்பான கண்டி வைத்தியசாலையில் ஆய்வுகளை நடத்தி முடிவுகளை அறிவிக்கும்வரை சுகாதார அமைச்சோ, தேசிய மருந்து கட்டுப்பாட்டு சபையோ நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித் தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும் என குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருந்து ஆய்வு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளது.
கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
கடந்த டிசம்பர் 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இந்திய நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் உற்பத்தி செய்த ஒன்டன்செட்ரான் என்ற ஊசி மருந்து தரமற்றது என்பதால், அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே நிறுவனத்தின் மேலும் 10 மருந்து வகைகளின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏழு நோயாளிக ளுக்கு ஒரே மாதிரியான கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தது. இது குறித்து ஆய்வு செய்தபோது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒன்டன்செட்ரான் மருந்துக் குப்பிகளுக்குள் ‘
ரைசோபியம் என்ற பக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், டிசம்பர் முதல் வாரத்தில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கண்டி வைத்தியசாலை ஆய்வுகளைச் செய்து அறிவிக்கும் வரை சுகாதார அமைச்சோ அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வியெழுப்புகிறது.
இந்த மருந்துகள் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கவலைக்கிடமான நோயாளிகளுக்கு வழங்கப்படுபவை. இரத்தத்தில் நேரடியாக ஏற்றப்படும் இந்த மருந்துகள் கிருமித்தொற்றுடன் வழங்கப்பட்டது பாரிய குற்றமாகும்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க சர்வதேச தரத்திலான ஆய்வகம் ஒன்று இன்னும் அமைக்கப்படவில்லை. இது குறித்து பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டும், அரசாங்கம் அதற்குப் நிதி ஒதுக்காமல் வேறு தேவையற்ற விடயங்களுக்கு நிதி ஒதுக்குவதாக வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தரமற்ற மருந்துகளால் பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த நோயாளிகளுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் நட்டஈடு வழங்க வேண்டும். உள்நாட்டிலேயே மருந்து தரப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும். தரமற்ற மருந்துகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்த மற்றும் தமது கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்துகள் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எத்தனை ஆயிரம் நோயாளிகளுக்கு இந்தத் தரமற்ற மருந்துகள் இதுவரை ஏற்றப்பட்டன என்பது குறித்த முறையான விசாரணை அவசியம் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.


















