-பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்-
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது தொடர்பில் கோரிக்கையினை முன்வைத்தோம்.
இதற்கு, அமைச்சர் ஆனந்த் விஜயபால குறித்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
இது இவ்வாறிருக்க மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளது என்றார்.
இந்த கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


















