அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் வழங்குவதை எதிர்க்கிறார்கள் யார் எதிர்த்தாலும் 200 ரூபா சம்பளத்தை வங்குவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றோம். நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக் கொண்டு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சம்பள அதிகரிப்புக்கு 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபா சம்பள அதிகரிப்பு பற்றி எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்தை குறிப்பிடுகிறார்கள். அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் தான் பெருந்தோட்ட மக்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்க்கிறார்கள். குறிப்பிட்டதைப் போன்று பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை வழங்குவோம். பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாக உள்ளார்கள். அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


















