-நாமல் ராஜபக்ஷ எம்.பி-
புத்தசாசனத்தையும் நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியுமென அரசாங்கம் நினைப்பது முற்றிலும் தவறாகும். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நாங்கள் அமோக வெற்றிப்பெறுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு,
மேலும் தெரிவிக்கையில்:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆட்சிப் பீடம் ஏறவதற்கு முன் அரசாங்கம் இளைஞர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனினும் இன்றளவும் எந்தவொரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
நாட்டு மக்கள் தற்போது விழிப்படைந்துள்ளனர். இந்நிலையில், தாம் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்து விட்டோம் என்பதை இளையோர்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளனர். எனவே நாம் மீண்டும் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றுவோம்.
புத்தசாசனத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் அழித்து புலம்பெயர் அமைப்புக்களின் விருப்பத்துக்கு அமைய செயற்பட்டால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்று நினைப்பது முற்றிலும் தவறாகும். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிக்குகள் இன்றும் சிறையில் உள்ளார்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் எம்மை கைது செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. தற்போது சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதால் விசாரணை நடவடிக்கைகள் தாமதமாகும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சொல்கிறார்.
அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டவர் பொலிஸ்மா அதிபராகவுள்ளார். இதற்கமைய பொலிஸ்மா அதிபர் ஊடாக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. இது முற்றிலும் தவறானதாகும் என்றார்.


















