-கனேடிய உயர்ஸ்தானிகர் அதிருப்தி-
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பாக கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுடனான சந்திப்பின்போதே கனேடிய உயர்ஸ்தானிகர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் இந்த நிலைப்பாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர், இந்தத் தாமதம் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
மாறாக, சட்ட ரீதியான சிக்கல்கள், தொழில்நுட்பத் தடைகள் மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளே இதற்குக் காரணம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்ததுடன், இது தொடர்பாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கனடாவின் ‘Pathways to Peace’ திட்டத்தின் கீழ் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும், இரு மொழிகளையும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மாணவர்கள் கனடாவில் உயர்கல்வியைத் தொடர மேலதிக வாய்ப்புகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
















