மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற குழுவின் அமர்வு ஏப்ரல் 7ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில் சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான முறைமை தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற குழு கடந்த அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில், கடந்த 17ம் திகதி முதல்தடவையாக கூடியது. இதன்போது, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமா அதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.
இதற்கமைய, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.


















