சஜித் பிறேமதாஸ தலைமையில் இன்று கூடவுள்ள எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற அமர்வு நாளை இடம்பெறவுள்ள நிலையில் அந்த வாரத்துக்குரிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கும், பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவோம். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகளை விட ஆளும் கட்சிக்யே அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை ஆளுங்கட்சிக்கு கிடையாது. புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டினோம். இறுதியில் நாங்கள் தான் புதிய கல்விக் மறுசீரமைப்பை பிற்போட்டோம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது அரசாங்கத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.


















