-6ம் திகதி நாடாளுமன்றில் பிரேரணை-
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற குழு ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை இம்மாதம் 6ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாக இது கருதப்படுகிறது. சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2026ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் கடற்றொழிலாளர் ஓய்வூதிய மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரகடனம் தொடர்பான விவாதம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்த விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் இடம்பெறும்.


















