மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே தேர்தலை நடத்த முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மாகாண சபைத் தேர்தலுக்காக பழைய சட்டமும் காணப்படுகிறது. புதிய சட்டமொன்றும் காணப்படுகிறது. குறித்த புதிய சட்டம் பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள இந்த சட்டத்துக்கமைய செயற்பட நடவடிக்கை எடுத்தாலும், அதற்கான எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே சட்டம் நடைமுறையிலிருந்தாலும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாதமையால், தேர்தலை நடத்த முடியாது. எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த காரணிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இது பாராளுமன்றத்தால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாகும்.
விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்படுகிறது. தமது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே தமக்கான பிரதிநிதியாக வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அதற்கமையவே புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் அதற்கமைய எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெறாமையால், புதிய சட்ட உருவாக்கத்துக்கான வாய்ப்புக்கள் பாராளுமன்றத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தால் கூடிய விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என்றார்.


















