-அமைச்சர் சந்தன அபேரத்ன-
மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கான குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோமென பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.
மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், புதியத் தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் யோசனைகளை முன்வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்தோ மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிக்கும் யோசனை அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சகல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய வகையில் சபாநாயகரால் இந்த குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும்.இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் எதிர்வரும் வாராம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றார்.


















