வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்புவது ஏன்?
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ள திருமாவளவன், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எட்டுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த எட்டுத் தொகுதிகளில் ஆறு தொகுதிகள் தனித் தொகுதிகளாகவும் 2 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமூக வலைதளத்தில் நேரலை மூலம் திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமையன்று அறிவித்தார்
கட்சித் தலைவரான தானே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து அறிவிப்பது இதுவே கடைசி என்றும், இனி கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு வேட்பாளரைத் தேர்வுசெய்து, அதனை மாநில நிர்வாகக் குழு ஆய்வுசெய்து வேட்பாளரை இறுதிசெய்யும் நடைமுறையை வலியுறுத்துவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
மேலும், ‘பல நெருக்கடிகள் இருந்தாலும் வலதுசாரிகள், மதவாத சக்திகள் ஆகியோர் வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாம் தி.மு.கவோடு கைகோர்த்து நிற்கிறோம். பல வருத்தங்கள் நமக்கு இருந்தாலும்கூட, அதாவது கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறமுடியவில்லை. குறிப்பாக அரூர் தொகுதியைக் கேட்டுப்பெற முடியவில்லை. இன்னும் பல வருத்தங்கள், வலிகள் நமக்கு உண்டு. ஆனால், இதுதான் தேர்தல் அரசியல். இந்தத் தேர்தல் அரசியலை நாம் எதிர்கொண்டாக வேண்டும். இன்னும் நாம் ஒரு மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதிசெய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம்.
நெடிய உளவியல் போராட்டங்களுக்குப் பின்னர், பலரோடும் கலந்தாலோசனை செய்த பின்னர், தற்போதைய அரசியல் சூழலை அறிந்து, எதிர்காலத்தில் தமிழக அரசியல் சூழலை எப்படி வழிநடத்தவிருக்கிறோம் கட்சியை வலுப்படுத்தவிருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து’ வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாகக் திருமாவளவன் குறிப்பிட்டார்.
அதன்படி, செய்யூர் தனித் தொகுதியில் சிந்தனைச் செல்வன், திண்டிவனம் தனித் தொகுதியில் வன்னி அரசு, திருப்போரூர் தொகுதியில் பன்னீர் தாஸ், பெரியகுளம் தனித் தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் தனித் தொகுதியில் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் கு. மாலதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
காட்டுமன்னார்கோயில் தனித் தொகுதியில் தானே போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்து அந்த நேரலையில் குறிப்பிட்ட திருமாவளவன், ‘தமிழக அரசியலில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோயிலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்’ என்றார். சூழல் எம்மாதிரி மாறவிருக்கிறது என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.


















