நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று வெளியிட்டார்.
100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரிய விழாக்களை நடத்தும்போது, தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களிலும் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஏசிகளும் அணைக்கப்பட வேண்டும். தனியார் துறையினரும் இதனைக் பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். இரவு 8 மணிக்குப் பின்னர் வர்த்தக விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சார விளக்குகள் மற்றும் திரைகள் அணைக்கப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களினால் நிர்வகிக்கப்படும் வீதி விளக்குகளை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அணைத்து வைப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















