அநுராதபுரம், நொச்சியாகம, வில்பத்துவ தேசிய வனப்பூங்கா பகுதியில் நீண்ட நாட்களாக காட்டு மிருகங்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளுக்கு விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரை வில்பத்துவ தேசிய வனப்பூங்காவின் நொச்சியாகம குகுள்கட்டுவ வட்டார வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நொச்சியாகம குகுள்கட்டுவ பகுதியில் 29 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து போர் 12 ரக துப்பாக்கி ஒன்றையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நொச்சியாகம எத்துள்ளாவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 45,28 வயதுடையவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள வில்பத்துவ தேசிய வனப்பூங்காவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


















