மன்னார் வளைகுடா கடற்பரப்புக்குள் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட படகுகள், நூற்றுக்கணக்கான மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். பின்னர், மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குத் திரும்பினர்.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருந்ததனால் மீன் பிடித்துவிட்டு உடனடியாக மீனவர்கள் கரை திரும்பியிருந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதேபோல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு இருந்ததாக மீனவர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு சொந்தமான படகில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோ நிறை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.150 என ரூ.17 ஆயிரம் கொடுத்து பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மீன் 17 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதில் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் இலங்கை பெறுமதி சுமார் 80 ஆயிரம் ஆகும்.
இதன்போது மீனை பெற்றுச் சென்ற கேரள வியாபாரி கூறுகையில், மஞ்சள் வால் கேரை மீனுக்கு கேரள மாநில அசைவ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மீனை அரை கிலோ, ஒரு கிலோ என வெட்டி எடை போட்டு 10 ஊர்களுக்கு பிரித்து அனுப்பி விற்பனை செய்துவிடுவேன் என்றார்.
வால்ப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் தட்டையான கத்தி போன்ற அமைப்பு காணப்படுகிறது. அவை வேகமாக இடப்பெயர உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை மீன்கள் அட்லாண்டிக், பசுபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதியில் வாழக்கூடியவை. இந்த மீன் வழக்கமாக 3 மீற்றர் நீளமும், அதிகபட்சம் 4.55 மீற்றர் நீளமும் மற்றும் 550 கிலோ எடை வரை வளரக்கூடியது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


















