கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடித் திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை – அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்பாட்டத்தில் ஏனைய மீனவ சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது ஆதரவையும் வழங்கியிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.
கட்டுவலையின் மூலம் 56 இடங்களில் அனுமதி பெற்று தாம் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், சிலர் தோணியில் தமது கட்டுவலைக்கு அருகில் வந்து கூட்டில் சிக்கியிருக்கின்ற கணவாய் மீன்களை விசேட தூண்டில்களை பயன்படுத்தி திருடுவதோடு, வலைகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர். இதனால் மீன்கள் வெளியேறிவிடுகின்றன இதனால் தமது வருமானம் இழக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.
1935 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக கட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தமது வாழ்வாதாரத்தை அரசாங்கம் பாதுகாத்து, திருட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


















