தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்துக்குள்ளான படகில் ஆறு மீனவர்கள் இருந்ததாகவும், அவர்களில் நால்வர் இந்தோனேசியப் படகு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், மீதமுள்ள இரு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நான்கு மீனவர்களும் இந்தோனேசிய மீன்பிடி படகின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில்,இம்மீனவர்களை அழைத்து வர இலங்கை கடற்படையினால் கப்பலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விபத்து நடந்த படகு அருகே பயணிக்கும் வர்த்தகக் கப்பல் ஒன்று இந்த மீனவர்களை ஏற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மீன்பிடிப் படகு கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்திருந்ததாக மீன்பிடித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


















