-மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை-
நாடளாவியரீதியில் முன்னறிவித்தல் இல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளன.
இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியுள்ளதால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சாரசபையின் 18 தொழிற்சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.
கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மின்சாரபiயின் சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, இலங்கை மின்சாரசபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மின்சாரசபை சட்டத்திலும், உயர்நீதிமன்ற உத்தரவிலும் இந்த நடைமுறைக்கு செல்ல முன்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம்.
கடந்த வாரம் இது குறித்து 8 காரணிகளை வலியுறுத்தி வலுசக்தி அமைச்சருக்கு எழுத்து மூல கோரிக்கையொன்றை கையளித்திருக்கின்றோம்.
அமைச்சரிடமிருந்து அதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. எம்முடன் கலந்தாலோசிக்காது ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம் என்றார்.


















