முழு நாடுமே துயரத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
முழு நாடுமே துயரத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பவாத அரசியல் செய்கின்றனர்.
இயற்கைப்பேரழிவினால் நாடு மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது இழப்புக்களை மதிப்பிட முடியாதுள்ளது.
முப்படையினரும், பொலிஸாரும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு மீட்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள்.
கடந்த 25 ஆம் திகதி முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் எடுக்கப்பட்டுள்ளன. அனர்த்த நிலை ஏற்பட்ட நாளில் இருந்து முப்படையினரும், பொலிஸாரும் தமது உயிரை பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கு 1000 கோடி ரூபா முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
சகல பிரதேச சபைகள் ஊடாகவும் நிதி நிவாரணம் சனிக்கிழமை முதல் வழங்கப்படும்.நெருக்கடி நிலையில் போது ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்காமல் போலியான குற்றச்சாட்டுக்களையே முன்வைக்கின்றனர் என்றார்.


















