பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில்,
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் பெறாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் முழுப் பாடசாலைக் கட்டமைப்பும் பெற்றோரின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.
2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலையின் முழுச் செலவையும் மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்து பெற்றோரிடம் அறவிடும் முறைமையே தற்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பிரபல்யமான பாடசாலைகளில் வர்ணம் பூசுதல் தளபாடங்கள் திருத்தம் செய்தல் போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 3000 முதல் 5000 ரூபா வரை பணம் அறவிடப்படுகிறது.
இவ்வாறான வசூலிப்புகள் பாடசாலை வங்கிக் கணக்குகளில் இடப்படாமல் வகுப்புக் குழுக்கள் என்ற பெயரில் தனிப்பட்ட பெற்றோரின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றன. இதன் மூலம் பாடசாலை நிர்வாகம் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக்கொள்ள முற்படுகிறது.
கல்வி அமைச்சரின் வெற்று வார்த்தைகளால் மட்டும் இதனைத் தடுத்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று எனது வாய்ச் சொல்லே சுற்றறிக்கை என்று கூறாமல் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.


















