நாட்டில் முறையாக வரி செலுத்துவோரை ஊக்குவித்து கௌரவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவர்களுக்கு விசேட சலுகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் வரி செலுத்தும் பொறுப்புள்ள பிரஜைகளுக்கு சலுகையாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சலுகை அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக சில தகுதிகள் கோரப்பட்டுள்ளதால், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர் வரி செலுத்தும் நபர்கள் மட்டுமே இந்த அட்டையைப் பெறத் தகுதியுடையவர்களாவர்.
முன்னைய மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரித் தொகையை முழுமையாகவோ அல்லது மேலதிகமாகவோ செலுத்தியிருத்தல் வேண்டும்.
வருமான வரி அறிக்கையை குறித்த ஆண்டின் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பித்திருப்பதும் அவசியம். அனைத்து வரிப் பணமும் (சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகள் உட்பட) உரிய திகதிக்கு முன்பதாக செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பதுடன் வரி செலுத்துவோரின் கடந்தகால வரி வரலாறுகள் திருப்திகரமாக அமைந்திருப்பதும் அவசியம்.
இதேவேளை,வரி செலுத்தும் தொகையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் இந்த அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் 5 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வருமான வரியாகச் செலுத்தியவர்களுக்கு தங்க அட்டை வழங்கப்படும்.அத்துடன் முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் 3 மில்லியன் ரூபா முதல் 5 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான தொகையை வரியாகச் செலுத்தியவர்களுக்கு வெள்ளி அட்டை வழங்கப்படவுள்ளது.
தகுதியுள்ளவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்கள இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து வருமானக் கண்காணிப்பு பிரிவின் ஆணையாளருக்கு நேரிலோ அல்லது rm@ird.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ அனுப்ப முடியும். அனைத்துத் தகுதிகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின் 03 வாரங்களுக்குள் சலுகை அட்டை விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















