-ருமேனியாவிடம் அமைச்சர் விஜித கோரிக்கை-
ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டிற்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கோரியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முக்கிய உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன.
அமைச்சர் விஜித ஹேரத் ருமேனியாவுக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற நிலையில் அந்தநாட்டு தொழிலாளர் துறை, வெளியுறவுத்துறை மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கை மற்றும் ருமேனியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில்,ருமேனியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்தநாட்டு ஊழியர்களுக்கு இணையான உரிமைகள் வழங்கப்படும் என ருமேனிய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதற்கு இலங்கையர்களுக்கான வேலை விசா வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தியமைக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ருமேனியாவில் முறையான ஆவணங்களின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP Plus வரிச்சலுகையை இலங்கை தொடர்ந்து பெறுவதற்கு ருமேனியாவின் ஆதரவை அமைச்சர் கோரினார்.


















