-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில், இரு நாள் மல்யுத்த பயிற்சி முகாமினை அம்மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோரால் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் குறித்தொதுக்கபட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் முன்னெடுக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கான இந்த இரு நாள் பயிற்சி முகாமில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களை சேர்ந்த 60 வீரர்கள் பங்குகொண்டிருந்தனர்.
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பிலும் இடம்பெற்ற குறித்த பயிற்சி முகாமில் மல்யுத்தப் பயிற்சியினை தேசிய மல்யுத்த பயிற்றுனர்கள் ஏ. திருச்செல்வம், நிஷேத் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரச அதிபர் திருமதி.ச.மஞ்சுளாதேவி, விளையாட்டு திணைக்களத்தின் சிரேஸ்ட மாவட்ட தலைமைப்பீட விளையாட்டு அலுவலர் எஸ். சதானந்தன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















