முல்லைத்தீவு – கொழும்பு வழித்தடத்தில் கடந்த 15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேரூந்து சேவையே சொகுசு பேரூந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக ரட்ணா ரவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கொழும்பு சொகுசு பேரூந்து சேவை ரட்ணா ரவல்ஸ்; ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டத்திற்கு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பேரூந்து உரிமையாளர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கேட்ட போது ரட்ணா ரவல்ஸ் உரிமையாளர் இவ்வாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
ரட்ணா ரவல்ஸ் பேரூந்து கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து முல்லைத்தீவு – கொழும்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதன்போது பயணிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், மக்கள் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் சாதாரண சேவையில் ஈடுபட்ட எனது பேரூந்தின் வழித்தட அனுமதி சொகுசு பேரூந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடாக குறித்த அனுமதி முறைப்படி பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே முல்லைத்தீவு – கொழும்பு சொகுசு பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மேலும் சொகுசு பேரூந்து சேவைக்கான தேவை இருக்கின்றது. அதனை தேவையானவர்கள் அரசாங்கத்தின் அனுமதி பெற்று சேவையில் ஈடுபட முடியும்.
அதைவிடுத்து, எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சொகுசு பேரூந்து சேவை தொடர்பில் பொய்யான பரப்புரைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்பவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என்றார்.


















