வி.சரவணன், பா.சதீஸ்
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பிலும் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிறுநீரக வைத்தியநிபுணர், நுண்ணுயிரியல் மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்திய சேவைகளை வழங்க முடியாதுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு பெண்நோயியல் வைத்திய நிபுணர் மற்றும் குழந்தைநல மருத்துவ நிபுணர் தலா ஒவ்வொருவரே காணப்படுவதாகவும் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதிலும் குறிப்பாக குழந்தைநல மருத்துவ நிபுணராக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது பணியாற்றிவருபவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு பதிலீடாக நியமிக்கப்பட்ட குழந்தைநல மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதால் தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைநல மருத்துவரை இதுவரை விடுவிப்புச் செய்யாமல் வைத்திருப்பதாகவும், பதிலீட்டு குழந்தைநல மருத்துவர் கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னரே தற்போது கடமையிலுள்ள குழந்தைநல மருத்துவர் இடமாற்றத்திற்கு தம்மால் அனுமதிக்கப்படுவார் எனவும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.


















