-தாய்மொழி தினத்தில் பிரதமர் ஹரிணி-
நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் புதிய நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் வலிமையானதொரு நாளாக அமைகின்றது.
இந்த உலகளாவிய நினைவுகூரலானது பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தொலைநோக்கு சிந்தனையுடனான முயற்சியினால் உருவானதாகும். பங்களாதேஷின் இந்த முன்னெடுப்பானது, ஒரு தேசிய நினைவுகூரலை மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாற்றியுள்ளது.
இலங்கையின் மொழிப் பன்முகத்தன்மை எமது பல்லினப் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பன்முகத்தன்மையானது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகப் பார்க்கப்படாமல், மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்படவேண்டிய ஒரு பலமாகப் பார்க்கப்படவேண்டும்.
நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுக்கும்போது, ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை உறுதிப்படுத்துகிறோம். பிளவுகள் எளிதில் வேரூன்றக்கூடிய இக்காலகட்டத்தில், மொழிப் பன்முகத்தன்மை மீதான மரியாதை, ஒத்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு பாலமாக அமையும்.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள டிஜிட்டல் யுகத்தில், இணையவெளியில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளன.
கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான ஆக்கபூர்வமான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் குறிப்பிட்டார்.


















