மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கைஆழ்ந்த கவலையடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் உடனடியாகக் குறைவதை இலங்கை ஆதரிக்கிறது. உலக அமைதியை நம்புகிறது.
அதிகரித்து வரும் இந்த மோதல் பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் ஏற்கனவே துயரமான உயிர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை இலங்கை கண்டிப்பதுடன் அனைத்து தரப்பினராலும் பொதுமக்களைப் பாதுகாப்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் ஒரு அடிப்படைக் கடமையாகும்.
கடுமையான மனிதாபிமான நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் பாதிக்கக்கூடிய முன்னேற்றங்களை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது
எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, மேலும் மோதலைத் தடுக்க பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு இலங்கை கேட்டுக்கொள்கிறது. மேலும் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


















