யாழ்ப்பாணத்தில் , வைத்தியசாலை வீதி, பல்கலைக்கழக வீதி, பாடசாலை வீதிகள் உள்ளிட்ட பிரதான வீதிகளை எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப அகலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கான பணிக்குரிய ஆய்வுக்கான விடயங்களை ஆராய்வு செய்வதற்கான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல், நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையிடலில் யாழ்ப்பாண நகரத்தின் எதிர்கால போக்குவரத்து தேவைகள், நகர அபிவிருத்தி மற்றும் மக்களின் அன்றாட போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து திட்டத்தை தயாரிப்பதற்கான முன்வைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் எதிர்கால நகர வளர்ச்சிக்கு ஏற்ற போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
வைத்தியசாலை வீதி, பல்கலைக்கழக வீதி, பாடசாலை வீதிகள் உள்ளிட்ட பிரதான வீதிகளை எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப அகலப்படுத்துதல்.
வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் வாகனத் தரிப்பிட வசதிகளை முறையாக ஒழுங்கமைத்தல்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் பாதுகாப்பான நடைபாதைகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பாதைகளை தனியாக அமைத்தல்.
கனரக வாகனங்கள் நகரப் பிரவேசத்திற்கான நேர அட்டவணையை ஒழுங்குபடுத்துதல்.
வீதி விபத்துக்களைத் தடுக்கும் வகையில் வீதி ஒழுங்குகள், போக்குவரத்துச் சின்னங்கள் மற்றும் சிறந்த தெருவிளக்கு வசதிகளை முறையாக ஏற்படுத்துதல்.
போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் சாரதி அனுமதிப் பத்திரத்தில் புள்ளி அடிப்படையிலான தண்டனை முறைமையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்தல்.
வீதிகளை அகலப்படுத்தும் போது தேவையாகும் காணி பெற்றுக்கொள்வதில் ஏற்படக்கூடிய சவால்கள், அதற்கான தீர்வுகள் மற்றும் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு திட்டமிடுதல்.
மொறட்டுவ பல்கலைக் கழகத்தினர் இப் பங்குதாரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுத்தல்.
மேலும், போக்குவரத்து முகாமைத்துவம், பொது போக்குவரத்து மற்றும் எதிர்கால நகர அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் டி.எஸ்.பி.கே. திசாநாயக்க, உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். சுதர்சன், மாவட்ட செயலர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக செயலர்களான க. சிவகரன், மற்றும் பா. ஜெயகரன், மற்றும் துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


















