யாழ்ப்பாணம் தனியார் முச்சக்கர வண்டி சாரதியார் சங்கக் கட்டடத்தில் இன்று (18) விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் Uber நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. தவதீசன் அவர்களும், PickMe நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. ஜெசிந்தன் அவர்களும் கலந்துகொண்டனர்.
தனியார் முச்சக்கர வண்டி சாரதியார் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற சாரதிகளுக்கும் செயலிகள் ஊடாக சேவையாற்றும் சில சாரதிகளுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகளைத் தீர்ப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டை காற்சட்டை மற்றும் உடலுடன் ஒட்டிய (Skinny) ரீ-சேர்ட் அணிந்து சாரதிகள் பணியாற்ற அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- சங்கத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ள தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, அங்குள்ள சாரதிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.
- குறிப்பிட்ட இடத்தில் சங்கத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி தரித்திருக்கும் போது, வீதியோரத்தில் பயணிகளிடம் வாகனத்தை நிறுத்தி சவாரிக்கு அழைக்கக்கூடாது. இவ்விதிமுறையை மீறியமைக்கான ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட சாரதியின் சேவை நிரந்தரமாக முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
- இருதரப்பினரும் வாய்த்தர்க்கம் மற்றும் முரண்பாடுகளில் ஈடுபடக்கூடாது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உரிய ஆதாரங்களுடன் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும்.
- குறித்த இடத்தில் சவாரியை ஏற்றாமல் பிரச்சினையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட சாரதிக்கு ஆதரவாக இருதரப்புச் சங்கமோ நிறுவனங்களோ தலையிடமாட்டாது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேற்குறித்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் இன்றுமுதல் அனைத்து செயலி (App) சேவைகளிலிருந்தும் முற்றாக முடக்கப்படுவார்கள் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடும் சங்க சாரதிகளுக்கும் செயலி சாரதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் குறைத்து, சுமுகமான சேவையை உறுதிப்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது.

















