இலங்கை திருஅவை, கொழும்பு மறைமாவட்ட யாழ். குருமுதல்வர் பிராந்தியத்தின் நூற்றாண்டு விழா வழிபாடு மற்றும் பொதுநிகழ்வு என்பன சுண்டிக்குளி புனித திருமுழுக்குநர் யோவான் ஆலயத்திலும், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் நாளை நடைபெறவுள்ளன.
1796 இலிருந்து அங்கிலிக்கன் கிறிஸ்தவர்களின் செயற்பாடுகள் இலங்கையில் தொடர்ந்தாலும் 1845 இல் கொழும்பு மறைமாவட்ட பேராயர் உயர் அருட்பணி ஜேம்ஸ் சப்மனின் ஆயராளுகை தலைமைத்துவம் ஆரம்பமானது.
கொழும்பு குருமுதல்வர் பிராந்தியத்தின் (ஆரம்பம்: 18.09.1818) ஊடாக மட்டும் இறைபணியை முன்னெடுப்பதில் சில சவால்கள் காணப்பட்டதால் 09.11.1925 இல் யாழ் குருமுதல்வர் பிராந்தியம் உருவாக்கப்பட்டது.
அப்போது, இலங்கையில் காணப்பட்ட மேற்கு, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் கொழும்பு குருமுதல்வர் பிராந்தியம் எனவும், வடக்கு, கிழக்கு, வடக்கு – மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் யாழ் குருமுதல்வர் பிராந்தியம் எனவும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
வரலாற்றில் குருநாகல் மறைமாவட்டம் (1950), நுவரெலிய குருமுதல்வர் (1984) பிராந்தியம் என்பன உருவானதால், தற்போது யாழ் குருமுதல்வர் பிராந்தியம் வடமாகாணத்தை மட்டும் அதன் எல்லைப்பரப்பாக கொண்டுள்ளது.
திருஅவை திருப்பணி மன்றத்தின் முதல் தூதுரைப்பாளர்களில் ஒருவரான அருட்பணி.ஜோசப் நைட் 1818 நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் வந்து நல்லூரில் நற்செய்திப் பணியைத் தொடங்கினார். சுண்டிக்குளி, கோப்பாய், கொக்குவில், பளை, உடுத்துறை, வன்னி மற்றும் வவுனியா எனுமிடங்களில் நற்செய்திப்பணி தொடர்ந்தது.
திருஅவை திருப்பணி மன்றம் கல்விப்பணியில் அதிக அக்கறை காட்டியது. யாழ் பரி. யோவான் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மற்றும் பல இடங்களில் இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலைகள் பல இயங்கின. ஊனமுற்றவர்களின் கல்வி 1956 இல கைதடி நவீல்ட் பாடசாலை ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
கல்விப்பணிக்காக இலங்கை வந்திருந்த செல்வி. மியூறியல் ஹட்சின்ஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கான கிளிநெச்சியில் கருணா நிலையத்தை தொடங்கினார். உளநிலை பாதிக்கப்பட்டோருக்கும் இங்கு பணி ஆரம்பிக்கப்பட்டது. இன்றும் இப்பணி தொடர்கின்றது. நீதி மைய ஒப்புரவுப்பணியை ஒப்புரவில்லம் (வவுனியா) சிறப்பாக முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பதிவேடுகளின்படி பின்வரும் குருமுதல்வர்களின் இறையாட்சிப் பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். திருவருட்பணி பிரான்சிஸ் லோரென்ஸ் பெவன் (1925 – 1935), திருவருட்பணி எரிக் ஹோரேஸ் டெனியர் (1937 – 1940), திருவருட்பணி. ஜோன் ஆபிரகாம் ரிச்சர்ட் நவரத்தினம் (1941 – 1969), திருவருட்பணி. ஜாபேஸ் ஜெபசிர் ஞானப்பிரகாசம் (1969 – 1978), திருவருட்பணி. சாம் ஹோசிங்டன் (1978 – 1988), திருவருட்பணி. டொனால்ட் ஜெயபாலன் கனகரத்தினம் (1988 – 1995), திருவருட்பணி. ஜோசப் சரவானந்தன் (1995 – 2001), திருவருட்பணி. செல்லையா பிலிப் நேசகுமார் (2002 – 2011), திருவருட்பணி. சாமுவேல் ஜெயந்த்குமார் ஜெயவீரசிங்கம் (2012 – 2016) மற்றும் திருவருட்பணி. பொன்னையா சாமுவேல் ஜெயக்குமார் (2017 – 2021) ஆகியோரது பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















