-நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்-
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநாகரிகமான செயல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஆகியோர் முறையான சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பொலிஸாரினால் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டதையடுத்து நாடாhளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்குச் சென்று, பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது எமது சமூகத்தில் தவறு நடக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுத்தால், அதனைச் சிலர் அரசியல் செயற்பாடு எனச் சித்தரிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இது அரசியல் சார்ந்த அல்லது தேர்தல் தொடர்பான விவகாரம் அல்ல. ஒரு மனிதாபிமானப் பிரச்சினை.
இது குறித்து அரசாங்கத்திடமிருந்து ஒரு தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றோம். சம்பவம் நடந்த இரவு வேளையில் பிணவறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் மூன்று ஊழியர்களையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு விசாரணை நடத்துவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. இவ்வாறானதொரு சம்பவம் நாட்டின் வேறு ஒரு பகுதியில் இடம்பெற்றிருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும்.
நாங்கள் இன்று பாரிய போராட்டத்தை நடத்த முற்படவில்லை, அமைதியான முறையிலான ஒரு கவனயீர்ப்பையே முன்னெடுக்கவிருந்தோம். இன்று ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகரைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.
இச்சம்பவம் குறித்து இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எமக்கு உறுதியளித்துள்ளார் என்றார்.


















