யேமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா துறைமுக நகரம் மீது ஹௌதி படையினர் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மோக்கா நகரம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) முதல் ஹௌதி படையினர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களில் அரசுப் படையினர் நால்வர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (12) மதியம் மோக்கா நகரம் மீது புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹௌதிகள் அறிவித்துள்ளனர். இதனால் துறைமுகத்தின் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக யேமன் அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அண்மைய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
செங்கடலின் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மண்டாப் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துக்கு ஹௌதிகள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மோக்கா மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.


















