சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு சொந்தமான 6,20,000 ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில், அந்த விடுதி உரிமையாளரின் மகளை உணவட்டுன பொலிஸார் கைது செய்தனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து சில மணித்தியாலங்களுக்குள் விரைவாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த அறையில் மறைத்து வைத்திருந்த கமராவொன்றில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த சந்தேகநபர் பல தடவைகள் இரகசியமான முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த அறைக்குள் நுழைவது அந்தக் கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் மூலம் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த விடுதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உணவட்டுன சுற்றுலாப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















