இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து 12 ஓட்டங்களால் திரில் வெற்றியினைப் பெற்ற இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 3-0 என முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை வைட்வொஷ் செய்தது.
ரி-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஹர்ரி புரூக் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர கடும் சவாலாக அமைந்தார். ஆரம்ப வீரர் பென் டக்கெட் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழக்க, ஜேக்கப் பெத்தேல், டொம் பென்டன் மற்றும் தலைவர் ஹர்ரி புரூக் ஆகியோரும் சொதப்பி இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இருப்பினும், அனுபவ வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் சாம் கரன் ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 48 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றார். பட்லர் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அபாரமாகப் பந்துவீசிய துஷ்மன்த சமீர 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேநேரம் மதீஷ பதிரண 2 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.
பின்னர் 129 என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கமில் மிஷார ஓட்டமேதுமின்றி ஆட்டமிழந்தார். பெதும் நிஸ்ஸங்க 23 குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பலமான நிலையில் காணப்பட்டிருந்தது. ஆனால் இதன் பின்னர் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் விக்கெட்டுக்களை மிகவும் குறுகிய இடைவெளிகளில் பறிகொடுத்த இலங்கை வீரர்கள் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 12 ஓட்டங்களால் போட்டியில் படுதோல்வி அடைந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேக்கப் பெத்தேல் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், வில் ஜேக்ஸ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் சாம் கரன் தெரிவானார்.


















