-வெறுங்கையுடன் நாடு திரும்பியது-
திருவனந்தபுரம் கிறீன்பீல்ட் சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.
இதற்கு அமைய 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி-20 கிரிக்கெட் தொடரை இந்தியா 5 – 0 என முழுமையாகக் கைப்பற்றி 2025 ஆம் ஆண்டை வெற்றியுடன் நிறைவுசெய்தது. அதேவேளை, இலங்கை வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் குவித்த அரைச் சதத்துடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது.
ஆமன்ஜோத் கோர் 21 ஓட்டங்களையும் ஹாமன்ப்ரீத் கோர் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 68 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 2 விக்கெட்களையும் ரஷ்மிக்கா செவ்வந்தி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.இலங்கை சுற்றுலா அணித் தலைவி சமரி அத்தபத்து 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இமேஷா துலானி சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டியில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரைவிட 19 வயதான ரஷ்மிக்கா செவ்வந்தி மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
அவர் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இந்திய பந்துவீச்சில் பயன்படுத்தப்பட்ட 6 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகியாக ஹாமன்ப்ரீத் கோர் தெரிவானார். தொடர் ஆட்ட நாயகியாக ஷபாலி வர்மா தெரிவானார்.


















