-மக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்து-
-சொ.வர்ணன்-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கன மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது.
அதாவது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இன்றும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும்.
எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அக்காலப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும்.
கடந்த பல ஆண்டுகளாக வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதியில் அதிகளவான மழையை பெற்றிருந்த முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் இந்த முறை குறைவான மழையை பெற்றிருக்கின்றன.
வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மழை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடும் மழை, பலத்த காற்று மற்றும் பலத்த இடி மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


















