-வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பொய்களைப் பரப்பி வருகின்றனர்-
அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும் எதிர்க்கட்சியினர் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என கூறியிருக்கும் தொழிற்றுறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிச்சயம் செயற்படுத்துவோம் எனவும் தெரிவித்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தி ன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று எதிர்ககட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆம் அவர்கள் குறிப்பிடுவதும் உண்மையே அவர்கள் குற்றஞ்சாட்டுவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஏதுமில்லை. மக்களை போலியாக ஏமாற்றாமல், நிலையான பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.
பாம்பு காட்டி மக்களை ஏமாற்றிய ஊடக நிறுவனத்தின் தலைவர் பாராளுமன்றத்தில் உள்ளார். இந்த ஊடகம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறிப்பாக ஆளுந்தரப்பினருக்கு கெப் ரக வாகனம் வழங்க 12500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. பொய்யை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செயற்படும் ஊடகத்தின் செய்திகளுக்கு மக்கள் அவதானம் செலுத்தக் கூடாது.
வரவு – செலவுத் திட்டத்தை மக்கள் முழுமையாக பரிசீலனை செய்ய வேண்டும். இந்த வரவு – செலவுத் திட்டத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்புக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ள எதிர்க்கட்சியினர் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் போலியான விடயங்களை குறிப்பிடுகிறார்கள். வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிச்சயம் செயற்படுத்துவோம் என்றார்.















