வடக்கிற்கான ரயில்களில் உறங்கும் பெட்டிகளை இணைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும், அதற்கு பதிலாக குளிரூட்டப்பட்ட சொகுசு ஆசனங்களுடனான பெட்டிகளை இணைப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல கேள்வி – பதில் நேரத்தின் போது வடக்கு, கிழக்கிற்கான ரயில் சேவைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
2014 தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையில் ரயில்வே திணைக்களத்தின் மொத்த வருமானத்தில் 8 வீதமானவை வடக்கு,கிழக்கு ரயில் நிலையங்களின் ஊடாக கிடைத்துள்ளது.
இதேவேளை வடக்கு மாகாண ரயில் நிலையங்களில் சிங்கள மொழியில் 14 பேரும், தமிழ் மொழியில் 68 பேரும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர மற்றைய அதிகாரிகளில் சிங்கள மொழியில் 52 பேரும், தமிழ் மொழியில் 64 பேரும் இருக்கின்றனர்.
அத்துடன் வடக்கில் 23 பிரதான ரயில் நிலையங்கள் அடங்கலாக மொத்தமாக 41 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையில் 16 பிரதான ரயில் நிலையங்களும் 13 உப ரயில் நிலையங்களும் உள்ளன. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையில் 7 பிரதான ரயில் நிலையங்களும் 4 உப ரயில் நிலையங்களும் உள்ளன. கிழக்கில் 18 பிரதான ரயில் நிலையங்கள் அடங்கலாக 14 ரயில் நிலையங்களும் இருக்கின்றன என்றார்.


















