இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 4 ஆம் திகதியும் தொடரும் வாய்ப்புள்ளது.
அதேவேளை இந்த மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சப்ரகமுவா மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன. மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.


















