-வி.சரவணன்-
வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தினை ஏற்கனவே தீர்மனிக்கப்பட்டவாறு வடமாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதனை விடுத்து வேறு இடங்களில் அலுவலகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தால் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை ஏற்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு எச்சரித்து மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் மையப்புள்ளி மாங்குளம் என்பதால் அங்கே வடமாகாணத்திற்குரிய மாகாணத் திணைக்களங்கள் அமைக்கப்படவேண்டுமென வட மாகாணசபையில் ஏற்கனவே அனைவராலும் தீர்மானிக்கப்பட்டிருந்து.
இதன் பிரகாரம் வடமாகாணத்திற்குரிய சில மாகாணத் திணைக்களங்கள் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 டிசம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட காணிபயன்பாட்டுக் குழுக்கூட்டத்தில் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்துக்கு மாங்குளத்தில் அமைப்பதற்கு 2 ஏக்கர் காணி ஒதுக்குவதென தீர்மானிக்கப்பட்டு காணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போதும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வாடகைக கட்டடத்தில் இயங்கி வருவதாக அறியமுடிகின்றது.
குறித்த வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடுசெய்யப்பட்டும் இதுவரை அங்கு அலுவலகம் அமைக்கப்படாமைக்கான காரணம் என்ன?
தொடர்ந்தும் எதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றது. மாங்குளத்தில் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளரை இதற்குரிய பதிலை வழங்க வேண்டும் என்றார்.

















