-கனேடிய எம்.பி. ஜுவனிதா நாதன்-
இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன். அதற்கமைய தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக அரசினால் திங்கட்கிழமை சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அயலகத்தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ஜுவனிதா நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
தமிழர்கள் உலகம் முழுவதும் பெரும் ஆளுமையாக வளர்ந்து வருகிறார்கள். அயலக தேசங்களில் தமிழ் மரபு, பண்பாடு மற்றும் மொழியைப் பாதுகாத்தும், வளர்த்தும் வருவதில் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய பங்குண்டு.
மேலும் தமிழ்நாடு பொருளாதார செயற்பாடுகளில் முன்மாதிரியாகவும், சிறப்பாகவும் வளர்ந்து வருகிறது. அதேவேளை மறுபுறம் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பொருளாதாரத்தை மீளக்கட்டமைப்பதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் தமிழக அரசினால் ஈழத்தமிழருக்கு உதவமுடியும் என நம்புகிறேன்.
அதற்கமைய, தமிழக வணிகர்கள் இலங்கையின் தமிழ் பிரதேசங்களில் முதலிடுவதற்கு தமிழ்நாட்டு அரசு ஊக்கமளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அதனூடாக தமிழ்நாடும் நன்மையடைய முடியும். இதற்கான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு கனேடிய தமிழர்கள் உட்பட புலம்பெயர் தமிழ்ச்சமூகங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட முன்வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றார்.


















