-ஏற்கனவே கைதான இருவரும் இரகசிய வாக்குமூலம்-
தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடுத்த கட்டமாக அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. தலங்கம – அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நவகமுவ பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கடந்த திங்கட்கிழம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நேற்று முன்தினம் கடுவெல நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட சட்டத்தரணி தரப்பினர் சார்பாக கிட்டத்தட்ட 50 வழக்கறிஞர்கள் முன்னிலையாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் சார்பாக எந்த வழக்கறிஞர்களும் முன்னிலையாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு சந்தேகநபர்கள் இருவரும் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


















