மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்பகேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அதிரடிப்படையினரால் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண்மை நடவடிக்கைக்காக வயலின் உரிமையாளர் உழவு இயந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்தும் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இதையடுத்து பொலிஸாரால் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள், ஒரு ஆர்.பி.ஜி. குண்டு, மற்றும் பிளாஸ்டிக் கான் ஒன்றில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று விசேட அதிரடிப்படையினர் அந்தப் பகுதியில் வைத்து வெடிக்க வைத்து அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


















